ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் || Thiruparankundram Murugan deivanai Thirukalyanam


திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று தேரோட்டம் நடக்கிறது.

முருகப்பெருமான் குடிகொண்டு அருளாட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 15 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாண வைபோகம் கோலாகலமாக நடந்தது.

இதனையொட்டி நேற்று அதிகாலை 5 மணியளவில் உற்சவர் சன்னதியில் மணமகன், மணமகளாக சுப்பிரமணியசுவாமி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதனையடுத்து மணக்கோல அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. பின்னர் மேள தாளங்கள் முழங்க கோவிலில் இருந்து முருகப்பெருமான் புறப்பட்டு சன்னதி தெரு வழியாக பசுமலை, மூலக்கரை அருகே உள்ள சந்திப்பு மண்டபத்திற்கு சென்றார்.

இதே வேளையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் தனித்தனியாக பல்லக்கில் புறப்பட்டு திருப்பரங்குன்றம் நோக்கி வந்தனர். இந்த நிலையில் காலை 7.40 மணிக்கு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் முருகப்பெருமான் தனது தாய்-தந்தையான மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரரை வரவேற்றார். இதன்பின் சந்திப்பு மண்டபத்துக்குள் எழுந்தருளிய சுவாமி- அம்மனுக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை நடந்து, அங்கிருந்து புறப்பாடாகி திருப்பரங்குன்றம் கோவிலை சென்றடைந்தனர்.

இந்த நிலையில் கோவிலுக்குள் மணமேடையான 6 கால் மண்டபத்தில், முருகப்பெருமான் திருமணத்தை நடத்தி வைக்க பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினார். பின்பு மீனாட்சி அம்மனும் மேடையில் எழுந்தருளினார்.

இதனையடுத்து தெய்வானையுடன்-முருகப்பெருமான் மேடைக்கு வந்தார். மணமேடையில் அக்னி வளர்க்கப்பட்டு திருமண சம்பிரதாய சடங்குகள் நடந்தன. முருகப்பெருமானின் பிரதிநிதியாக சங்கர் பட்டரும், தெய்வானையின் பிரதிநிதியாக ரமேஷ் பட்டரும் இருந்து திருமண சடங்குகளை நிறைவேற்றினர்.

மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் ஆகியோர் நடத்தி வைக்க, பகல் 12.55 மணிக்கு முருகப்பெருமான்- தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதனை தொடர்ந்து சுவாமி- அம்பாளுக்கு மகா தீபாராதனை நடந்தது. அப்போது அங்கு கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அட்சதை தூவி, அரோகரா கோஷம் முழங்க திருக்கல்யாணத்தை கண்டு தரிசித்தனர்.

திருக்கல்யாணம் முடிந்ததும் சுமங்கலிப்பெண்கள் புதிய மங்கல நாண் மாற்றிக் கொண்டனர். பக்தர்கள் மொய் எழுதினார்கள். திருக்கல்யாணத்துக்கு. முருகப்பெருமானின் 6-ம் படை வீடான ேசாைலமலையில் இருந்து சீர்வரிசை கொண்டுவரப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இரவு 7 மணியளவில் 16 கால் மண்டபம் அருகே பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். இதேவேளையில் சர்வ அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பிறகு அங்கிருந்து விடைபெற்று கோவிலை நோக்கி மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் புறப்பாடு நடந்தது. திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கல்யாண வைபோகத்துக்கு சென்றிருந்ததால் நேற்று காலை முதல் இரவு வரை மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்தது. அங்கு பக்தர்கள் வேறு வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (22-ந்தேதி) காலை 6 மணிக்கு கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடக்கிறது.

இதற்காக பாரம்பரிய முறைப்படி கிராம நாட்டாண்மைக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment