சர்ப்ப தோ‌ஷம் எப்படியெல்லாம் திருமணத்தடையை ஏற்படுத்தும்?


மகிழ்ச்சியான மண வாழ்விற்கு சவால் விடும் பல்வேறு தோ‌ஷங்களில் சர்ப்ப தோ‌ஷமும் ஒன்றாகும். ஒருவருடைய ஜாதகத்தில் 1,2,7,8-ம் இடங்களில் ராகு,கேதுக்கள் நின்றால் அது சர்ப்ப தோ‌ஷமாகும்.

மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் பல்வேறு விதமான சங்கடங்களுக்கு ஜாதகரீதியான தோ‌ஷம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மகிழ்ச்சியான மண வாழ்விற்கு சவால் விடும் பல்வேறு தோ‌ஷங்களில் சர்ப்ப தோ‌ஷமும் ஒன்றாகும்.

ஒருவருடைய ஜாதகத்தில் 1,2,7,8-ம் இடங்களில் ராகு,கேதுக்கள் நின்றால் அது சர்ப்ப தோ‌ஷமாகும். லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தாலும், அதற்கு ஏழாமிடத்தில் ராகு, கேது இருந்தாலும், இரண்டாம் இடத்தில் ராகு, கேது இருந்தாலும், எட்டாம் இடத்தில் ராகு,கேது இருந்தாலும் சர்ப்ப தோ‌ஷம் என்று சொல்வார்கள்.

லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதற்கு 7ம் இடத்தில் ராகு அல்லது கேது கண்டிப்பாக இருப்பார்கள். காரணம் ராகு கேது என்பவர்கள் 180 டிகிரி கோணத்தில் நிரந்தரமாகச் சுற்றி வருபவர்கள். எனவே ராகு இருக்கும் இடத்திற்கு ஏழாம் இடத்தில் கேது இருப்பதும், கேது இருக்கும் இடத்திற்கு 7ம் வீட்டில் ராகு இருப்பதும் இயல்பான ஒன்றாகும்.

இவ்வகை அமைப்பைப் பெற்றவர்கள் எந்த ஒரு வி‌ஷயத்திலும் அவ்வளவு எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள். ஒரு வி‌ஷயத்தை இப்படிச் செய்தால் நன்றாக இருக்குமா அல்லது வேறுமாதிரியாகச் செய்ய வேண்டுமா என்று சதா குழம்பிக் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு முடிவையும் உடனுக்குடன் எடுத்துவிட மாட்டார்கள். தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புவதில் வல்லவர்களாக இருப்பார்கள். அதேபோல இவர்களால் எந்த ஒரு வி‌ஷயத்திலும் தனித்துச் செயல்பட இயலாது. கொடிபோல படர்ந்து செயல்படக்கூடியவர்கள். சரியான ஊன்றுகோல் போன்று துணை கிடைத்து விட்டால் அவர்களைக் கொண்டு வாழ்க்கையில் சிறப்பான ஏற்றத்தினைக் காண்பார்கள்.

லக்னம் எனும் ஒன்றாம் இடத்தின் மூலம் ஜாதகனின் உயிர், தேகம், குணம் உருவம், நிறம், விதி ஆகியவற்றை அறிய முடியும். லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகரின் முகம், தலை பெரியதாக இருக்கும். இந்த நபர்கள் மிகவும் தைரியசாலிகளாகவும், எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெற கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

லவுகீகத்தில் உள்ள அனைத்து இன்பங்களையும் முழுமையாக ரசித்து வாழ வேண்டும் என நினைப்பவர்கள்.சுயநலம், சுதந்திர சிந்தனையும் செயல்பாடும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த வி‌ஷயத்திலும் முன்னிலையில் இருக்க விரும்புவார்கள். சிற்றின்ப வேட்கை அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள். பிறரின் கஷ்டம், வேதனையை கண்டு கொள்ளாதவர்களாக இருப்பார். தனது காரியம் நிறைவேறுவதிலேயே குறியாக இருப்பர். பிரமாண்ட எண்ணங்கள் மிகுதியாக இருக்கும். குறுக்கு வழியை கையாண்டு எதையும் அடைய வேண்டும் என்ற வெறி இருக்கும். எதையும் கூர்ந்து கவனிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பர்.

இவர்களிடம் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை அவ்வளவாக எதிர்பார்க்க முடியாது. சற்று சோம்பேறித்தனமும் அதிகம் இருக்கும். லக்னத்தில் ராகு இருந்தால் உடல், மனம் இரண்டையும் பாதிப்பார். நல்ல குணங்களை தள்ளிப்போகச் செய்வார்.

இரண்டாமிடம் என்பது தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம். சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் பேசியாராலும் ஜெயிக்க முடியாது. காரமான, சூடான சுவையான, அசைவ உணவுகளை ருசித்து உண்பார்கள். திரித்து பேசும் குணம் உண்டு. பொய் சத்தியம் செய்பவர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றத் தெரியாதவர்கள்.

பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வு மிகுதியாக இருக்கும். தன வரவு மிகுதியாக இருந்தாலும் தங்காத நிலை உண்டு. குடும்ப உறுப்பினர்களை உதாசீனம் செய்வார்கள். குடும்ப உறவுகளுடன் ஒட்டாமல் தனித்து வாழ விரும்புவார்கள். யார் என்ன சொன்னாலும் உள் வாங்க மாட்டார்கள். தான் சொல்வதை பிறர் கேட்க வேண்டும் என்று விரும்புவார்கள். குடும்ப வி‌ஷயத்தை பிறரிடம் கூறி பிரச்சினையை வளர்ப்பவர்கள்.

தன் பேச்சினால் பிறரை வதைப்பார்கள். நியாயத்திற்கு புறம்பாக பொருள் ஈட்டுவார்கள்.

பொருளாதார வசதியை அதிகரிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

அடுத்தவர் மீது குற்றம் காணும் மனப்பான்மை மிகுதியாக இருக்கும்.

குள்ளமான தோற்றம் உண்டு. லக்னம் எனும் ஒன்றாம் இடத்தில் கேது இருந்தால் ஜாதகர் அனுபவ அறிவு மிகுந்தவர்கள். பொருளாதாரத்தில் மந்த நிலை மிகுதியானதாக இருக்கும். பிறர் பிரச்சினையை தன் தோளில் சுமப்பவர்கள். மற்றவர்களை எண்ணி கவலை அடையக்கூடியவர்கள். கவுரவம், கவுரவம் என அலைந்து தனக்கு வேண்டியது என்னவென்றே தெரியாமல் போராடிக் கொண்டு இருப்பார்கள். இவர்களை மதிக்க வேண்டியவர்கள் உதாசீனப்படுத்துவார்கள். அந்தஸ்தான பெயரெடுக்க கடுமையாக உழைக்க வைக்கும்.

அனைத்து திறமை இருந்தும் முன்னேற முடியாத நிலை இருக்கும் அல்லது திறமையை வெளிக்காட்டிக் கொள்ள முடியாது.

இரண்டில் ராகு உள்ளவர்கள் பேசியே பிரச்சினையை அதிகரிப்பார்கள். ஆனால் இரண்டில் கேது இருப்பவர்கள் பேசாமலே மவுனமாக சாதிப்பார்கள். உறவிற்காக சுதந்திரத்தை பறி கொடுப்பார்கள். சிறந்த நேர்மைவாதியாக சூழ்நிலை கைதியாக இருப்பார்கள். குடும்பத்தை கட்டுக் கோப்பாக கொண்டு செல்ல கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்படும். வாக்கு கொடுத்து மாட்டிக் கொள்வார்கள். குடும்ப பிரச்சினைக்கு பஞ்சாயத்து வைப்பவர்கள் அல்லது நீதிமன்றம் செல்பவர்களாக இருப்பர்.

ஏழாமிடம் என்பது களத்திரம், நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், சம்பந்திகள் பற்றிக் கூறுமிடம். ராகு தான் நின்ற பாவக பலனை பிரமாண்டப் படுத்தும் குணம் கொண்டவர் என்பதால் அதீத இல்லற இன்பத்தால் ஒன்றுக்கு மேற்பட்ட துணையை நாடலாம். அல்லது இயல்பாகவே ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். சிலருக்கு காதல் கலப்பு திருமணம் நடக்கும். வேற்று மத நண்பர்கள் அதிகம் உண்டு. தொழில் கூட்டாளிகள் வஞ்சிப்பார்கள். பணிபுரியும் இடத்தில் உடன் வேலை பார்ப்பவர்களால் மன உளைச்சல் உண்டு. சம்பந்திகளால் அவமானம் உண்டு.

ஏழாமிடத்தில் கேது இருந்தால் வெகு சிலருக்கு கால தாமத திருமணம் நடக்கும். வெகு சிலருக்கு இல்லற இன்ப நாட்டம் குறைவுபடும். வாழ்க்கைத் துணையை புரிந்து கொள்ள மாட்டார்கள். பாலின வியாதி ஏற் படலாம். வாழ்க்கைத் துணைக்கு கடன் உருவாகலாம். குறைவான நண்பர்கள் உண்டு.

முறையாக எது செய்ய நினைத்தாலும் தாமத மாகும். நண்பர்கள், தொழில் கூட்டாளி கள், வாடிக்கையாளர்களால் வம்பு வழக்கு உண்டு. பணிபுரியும் இடத்தில் வம்பு, வழக்கு வரும். சில தம்பதிகள் சட்ட உதவியுடன் பிரி கிறார்கள்.

எட்டாமிடம் என்பது ஆயுள் ஸ்தானம். பெண்ணிற்கு மாங்கல்ய ஸ்தானம் . திடீர் அதிர்ஷ்டம் வரும். உயர்ந்த நிலைக்குச் செல்வார்கள்.

அந்த அதிர்ஷ்டம் இவர்களை விட இவர்களைச் சார்ந்தவர்களுக்கே பயன்படும். சிலருக்கு விபத்து ஏற்படலாம் அல்லது பொருள் திருடு போகலாம். நன்மையும், தீமையையும் எப்படி வரும், யார் மூலம் வரும் என்று நிதானிக்க முடியாது. சிலருக்கு தேவையில்லாத வதந்திகளால் அவமானம் ஏற்படும். இவ்விடத்தில் உள்ள ராகு, கேதுவினால் ஜாதகருக்கு அசுபங்கள் அதிகரிக்கும். சுபங்கள் குறைவுபடும்.

மேலே கூறிய அனைத்தும் ராகு, கேதுக்கள் நின்றபாவக ரீதியான பொதுவான பலன்கள். ராகு,கேதுக்கள் இருட்டான நிழல் கிரகங்கள் என்பதால் எந்த இடத்தில் அமர்வதும் நல்ல நிலை அல்ல. தான் நின்ற வீட்டு ஆதிபத்திய ரீதியாக ஜாதகரை பிரகாசிக்க இயலாமல் செய்வார்கள். இருட்டு படர்ந்த பாவக காரக ரீதியான பலன்கள் என்பதால் போதிய திறமை இருந்தும் வெளியே தெரியாது அல்லது உங்களுடைய திறமைகள் வெளிபடுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். உதாரணமாக ஜனன ஜாதகத்தில் ஏழில் ராகு நின்றால் திருமணத்தை தடை செய்யமாட்டார்.

திருமண வாழ்வில் பிரச்சினையை தருவார் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை தருவார் என்று பொருள். ஒரு செயலை நடத்தித் தராமல் தடை பிரச்சினையை தருபவர் கேது அந்த வகையில் தான் நின்ற பாவக பலனை அனுபவிக்க தடையை தருபவர் கேது. அதனால் ராகு,கேது இரண்டுமே பிரச்சினை தான். மேலும் தான் நின்ற பாவக ஆதிபத்திய ரீதியாக உயிர் அல்லது பொருள் காரகத்துவம் என ஏதாவது ஒன்றை மட்டுமே பாதிக்கும். எந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறதோ அந்த பாவகம் காரகம் தொடர்பான ஏதாவது ஒரு பாதிப்பு இருக்கும். தனித்த ராகு,கேது ஏற்படுத்தும் பாதிப்பு குறைவாக இருக்கும்.

ஆனால் இவர்களுடன் சேர்ந்த கிரகத்தால் ஏற்படும் பாதிப்பு மிகைப்படுத்தலாக ஜாதகரின் வாழ்க்கையை அசைக்கும்.

திருமணம் தொடர்பான 1,2,7,8 பாவகங்களில் நிற்கும் ராகு,கேதுக்கள் சர்ப்ப தோ‌ஷத்தால் திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள், கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுக்க முடியாத ஈகோ பிரச்சி னைகளை உருவாக்கும்.

இதனால் சர்ப்ப தோ‌ஷத்திற்கு சர்ப தோ‌ஷத்தையே நாம் சேர்க்கும் போது சில தோ‌ஷங்கள் நிவர்த்தியாகிறது. அதனால் தான், தோ‌ஷத்திற்கு தோ‌ஷம் சேர்க்கும் போது சில பாதிப்புகள் விலகும் என்று சொல்கிறோம். சுருக்கமாக,

1. ஒரு பெண்ணின் ஜாதகத்தில் களத்திர காரக கிரகமான செவ்வாய்க்கும் ஆணின் ஜாதகத்தில் களத்திர காரக கிரகமான சுக்ரனுக்கும் சர்ப்ப கிரகங்களின் சம்பந்தம் இருந்தால் மட்டுமே திருமணத்தடை இருக்கும்.

திருமணத்திற்கு பின்பும் மண வாழ்வில் சங்கடங்கள் இருக்கும்.

2. சுய சாரம் அல்லது சாரப் பரிவர்த்தனை பெற்ற ராகு,கேதுக்களுக்கு திருமணத் தடையை ஏற்படுத்தும் வலிமை உண்டு.

3. 8-ம் இடத்தில் ராகு,கேதுக்கள் நின்று தசை நடத்தினால் உரிய வழிபாட்டிற்கு பிறகு திருமணம் நடத்தலாம். கோடான கோடி தம்பதிகள் 7, 8-ல் சர்ப்ப கிரகங்கள் நின்று மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

4. ஜனன கால ஜாதக ரீதியாக தசா புக்தி சாதகமாக இருந்தால் திருமணம் தொடர்பான பாவகங்களில் பிரச்சினை இருந்தாலும், அசுப கிரகங்கள் நின்றாலும் திருமணம் நடக்கும். திருமண வாழ்க்கை பாதிக்காது.

சுய ஜாதகத்தில் பெண்ணிற்கு செவ்வாயும், ஆணிற்கு சுக்ரனும் நல்ல நிலையில் இருந்தால் தசா புக்தி சாதகமாக இல்லாத நிலையிலும் ஜாதகத்தில் கடுமையான தோ‌ஷம் இருந்தாலும் திருமண வாழ்க்கை பாதிக்காது. உரிய வயதில் திருமணம் நடக்கும்.

அதனால் எந்த தோ‌ஷமாக இருந்தாலும் சீர் தூக்கி பார்க்காமல் ராகு,கேது திருமணத் தடை என்று பொதுவான காரணத்தைக் கூறி திருமணத் தடையை ஏற்படுத்தக் கூடாது. வெகு சிலருக்கு ஏற்படும் பிரச்சினையை பிரமாண்டப்படுத்திமனிதர்கள் தங்களுக்கு தாங்களே திருமணத் தடையை ஏற்படுத்திக் கொண்டு ராகு,கேதுக்கள் மீது பழி சுமத்த லாமா? எத்தகைய பிரச்சினையாக இருந்தாலும் அனுசரித்து வாழப்பழகும் போது பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

மேலே கூறிய விதிகளின் படி உண்மையில் பாதிப்பு இருந்தால் தொடர்ந்து 108 நாள் நாகாபரணம் தரித்த ஈஸ்வரனை வில்வ மாலை அணிவித்து வழிபட்டால் ராகு,கேதுவினால் ஏற்படும் தடைகள் அகலும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment