தஞ்சை பெரியகோவில் தேரோட்டத்தை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி


வருகிற 13-ந் தேதி நடக்கும் தஞ்சை பெரியகோவில் தேரோட்டத்தையொட்டி தேரை அலங்கரிப்பதற்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 16-ந் தேதி வரை காலையில் பல்லக்கு புறப்பாடும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 8-ந் தேதி மாலை முத்துப்பல்லக்கில் சந்திரசேகரசாமி புறப்பாடும், 11-ந் தேதி மாலை ஓலைச்சப்பரத்தில் சாமி-அம்மன் தனித்தனியாக புறப்பாடும் நடைபெற உள்ளது. வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 5.45 மணிக்கு மேல் பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்-கமலாம்பாள் ஆகிய சாமிகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு, மேலவீதியில் உள்ள தேர் மண்டபத்தை சென்றடையும்.

பின்னர் காலை 6.30 மணிக்கு தியாகராஜர்-கமலாம்பாள் தேரில் எழுந்தருளியதும், தேரோட்டம் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தேரோட்டம் நடைபெற உள்ளது.

தஞ்சை மேலவீதியில் தேர் நிறுத்தப்பட்டுள்ளது. தேரை பாதுகாக்க மரப்பலகை மற்றும் கண்ணாடியால் கூண்டு அமைக்கப்பட்டு இருந்தது. தேரோட்டத்தையொட்டி அந்த கூண்டு அகற்றப்பட்டது. இந்தநிலையில் தேரை அலங்கரிப்பதற்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்றுகாலை நடந்தது. இதையொட்டி சிறப்பு யாகம், பூஜைகள் செய்யப்பட்டு பந்தக்காலுக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பந்தக்காலை மாவிலை தோரணங்கள், மலர்களால் அலங்காரம் செய்தனர். இதையடுத்து தேரில் பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தேரோட்டத்தையொட்டி வருகிற 13-ந் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment