திரளான பக்தர்கள் தரிசனம் || Thirukurungudi Sri Azhagiya Nambi Temple Panguni Festival


திருக்குறுங்குடியில் நடைபெற்ற பங்குனி திருவிழாவில், சித்தர்களுக்கு நம்பி சுவாமிகள் காட்சி கொடுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5 நம்பி சுவாமிகள், சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் 5-ம் நாளான நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதையொட்டி நம்பி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து இரவில் கோவிலில் இருந்து நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி ஆகிய 5 நம்பிசுவாமிகளும் தனித்தனியாக 5 கருட வாகனங்களில் எழுந்தருளி நிகழ்ச்சிக்காக புறப்பட்டனர்.

ரதவீதிகள் வழியாக திருவீதி உலா வந்த 5 நம்பிகளும் நேற்று அதிகாலை 4.40 மணிக்கு மேலரதவீதியில் மேற்கு நோக்கி எழுந்தருளி, மகேந்திரகிரி மலையை கடாஷித்து அங்கு வாழும் தேவகந்தர்வ சித்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி திருக்குறுங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment