திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை


திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் கலந்து கொண்டார்.

திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் மணிவிழா, சதாபிஷேகம், ஆயுள் ஹோமம், ஆயுள் விருத்திக்காக பல்வேறு யாக பூஜைகளும் நடைபெறுகின்றன.

இந்த கோவிலில் மூன்று ராஜகோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் வருகிற 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடைபெற உள்ளது.

குடமுழுக்கையொட்டி அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள அபிராமி அம்மன் சன்னதியில் நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற 108 பெண்களுக்கு ஸ்வர்ண புஷ்பம் மற்றும் மங்கலப் பொருட்கள் அடங்கிய பிரசாதங்களை வழங்கினார்.

முன்னதாக தருமபுரம் ஆதீனம் கோ பூஜை, கஜ பூஜை செய்து வழிபட்டார். இதில் கோவில் குருக்கள், கோவில் அலுவலர்கள் உடன் கலந்து கொண்டனர். பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குடமுழுக்கு விழாவையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து கோவிலுக்கு வந்து பணிகளை பார்வையிட்டார். பின்னர் கோவில் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளிடம் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது மயிலாடுதுறை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், கும்பகோணம் உதவி ஆணையர் இளையராஜா, உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் ஆய்வாளர்கள், கோவில் நிர்வாகிகள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment