துலாம், விருச்சிகம், தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! – 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை | vaara rasipalangal

துலாம்: கிரகநிலை: ராசியில் கேது – சுக ஸ்தானத்தில் செவ், சுக், சனி – பஞ்சம ஸ்தானத்தில் குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் – களத்திர ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்: 31-03-2022 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

03-04-2022 அன்று புதன் பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

06-04-2022 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

இந்த வாரம் பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள் கவுரவக் குறைச்சல் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மெத்தனப்போக்கு காணப்பட்டாலும் குருவின் சஞ்சாரத்தால் தேவையான பணவரத்தும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையைக் காண்பீர்கள்.

பேச்சைக் குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையைத் தரும். குடும்பத்தில் சுமுகமான நிலை காணப்படும். பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தாய் தந்தையின் உடல்நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு தொல்லைகள் குறையும். அரசியல்வாதிகளுக்கு வீண் செலவுகள் உண்டாகலாம். வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்ப்பார்ப்பது போல் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்.

பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும். காரியத்தடை நீங்கும்.

***********************

விருச்சிகம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ், சுக், சனி – சுக ஸ்தானத்தில் குரு – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்: 31-03-2022 அன்று சுக்ர பகவான் தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

03-04-2022 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

06-04-2022 அன்று செவ்வாய் பகவான் தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

இந்த வாரம் இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையைக் கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுர்யமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள்.

ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம். குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு தங்களின் திறமையைக் கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மாணவர்களுக்கு கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்.

பரிகாரம்: ஆஞ்சநேய கவசத்தை படித்து வருவது மனக் குழப்பங்களை நீக்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நன்கு நடந்து முடியும்.

***********************

தனுசு: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ், சுக், சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு – சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் – பஞ்சம ஸ்தானத்தில் ராகு – லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்: 31-03-2022 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய, வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

03-04-2022 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

06-04-2022 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய, வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

இந்த வாரம் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் சாமர்த்தியமாக செயல்படுமளவு தன்னம்பிக்கை ஏற்படும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப்பெறுவார்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களுக்கு நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மனதிருப்தியை தருவதாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். மாணவர்கள் திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

****************


ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல

Source link

Leave a Comment