ராமேசுவரம் கோவிலில் 1008 சங்காபிஷேகம் || Rameshwaram Ramanathaswamy Temple 1008 Sangu abhishekam


ராமேசுவரம் கோவிலின் மேலவாசல் முருகன் சன்னதியில் அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 60-வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடந்தது.

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திர விழா நடந்தது. இதையொட்டி ராமேசுவரம் கோவிலின் கருவறையில் உள்ள சாமி, அம்பாள், விஸ்வநாதர், விசாலாட்சி உள்ளிட்ட சன்னதிகளில் அபிஷேகம் செய்ய 1008 சங்குகள் விஸ்வநாதர் சன்னதி எதிரே அடுக்கி வைக்கப்பட்டு அதில் கங்கை தீர்த்தம் ஊற்றப்பட்டு சாமி- அம்பாளுக்கு சங்காபிஷேக பூஜை நடைபெற்றது. சங்கா பிஷேக பூஜையில் கோவில் இணை ஆணையர் பழனி குமார், பேஷ் கார்கள் முனியசாமி, செல்லம் கமலநாதன், ராம நாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ராமேசுவரம் கோவிலின் மேலவாசல் முருகன் சன்னதியில் அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 60-வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடந்தது. மேல வாசல் முருகன் சன்னதியில் நேர்த்திக்கடன் செலுத்த நேற்று காலை முதல் மாலை வரையிலும் பால்குடம், மயில், பறக்கும் காவடிகளில் பக்தர்கள் தொங்கியபடி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் 2 அடி முதல் 20 அடி நீளம் வரையிலான நீண்ட வேல்களை வாயில் குத்தியபடியும் சாலைகளில் ஆடி வந்து மேலவாசல் முருகன் சன்னதியில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று இரவு 8 மணி அளவில் மேலவாசல் முருகன் சன்னதியில் பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மகாதீபாராதனை பூஜை நடைபெற்றது.

பூஜையில் யாத்திரைப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் ரவி, பத்மநாபன், மலைச்சாமி, வெள்ளைச்சாமி உள்ளிட்ட யாத்திரை பணி யாளர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தீபக்சிவாஜ் தலைமையில் ஏராளமான போலீசார், ஊர்காவல் படையினர் ராமேசுவரம் கோவில் ரத வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். வெயில் காலத்தையொட்டி ராமேசுவரம் நகராட்சி சார்பில் தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, ஆணையாளர் மூர்த்தி ஆகியோர் ஏற்பாட்டில் பக்தர்கள் வசதிக்காக சாலையில் லாரிகள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment