ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நம்பெருமாள் தங்க கருடவாகனம், சேஷ வாகனம், கற்பகவிருட்ச வாகனங்களில் சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் 9-ம் நாளான நேற்று நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் அன்று இந்நிகழ்ச்சி நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்பெருமாளும், தாயாரும் ஒருசேர இருப்பார்கள். அவர்கள் ஒருசேர இருக்கும் காட்சியை சேர்த்தி சேவை என்று அழைப்பர்.

பெருமாளையும், தாயாரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம். இந்நிகழ்ச்சியையொட்டி கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியாக காலை 9.30 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டருளி பகல் 12 மணிக்கு முன்மண்டபம் வந்து சேர்ந்தார்.

பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பங்குனி உத்திரமண்டபத்திற்கு பகல் 2 மணிக்கு வந்து சேர்ந்தார். மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் பகல் 2 மணிக்கு புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை பகல் 2.15 மணிக்கு வந்தடைந்தார். பகல் 3 மணிமுதல் இரவு 10.30 மணி வரை சர்வ அலங்காரத்துடன் பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்த சின்னப்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளிவிட்டு தாயார் சன்னதியை சென்றடைந்தார். இரவு 12 மணி முதல் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணிவரை திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து தாயார் புறப்பட்டு காலை 5.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளியிருந்த பெருமாள்-தாயார் சேர்த்தி சேவையை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து இரவு முழுக்க தரிசனம் செய்தனர்.

சேர்த்தி சேவைக்கென தாயார் சன்னதிக்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் சன்னதிக்குள் வரவும், வெளியில் செல்லவும் தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. பக்தர்களின் தாகம் தீர்க்க நீர்மோர், பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. கூட்டநெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment